ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று (பிப்.20) மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடக்க இருக்கும் சூழலில், ஜனநாயக விரோத செயல்களிலும், அத்துமீறல்களிலும், பணப்பட்டுவாடா நடவடிக்கைகளிலும் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகம் ஏற்றுக்கொள்ள முடியாத செயலை திமுகவினர் செய்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செல்வதில் கைதேர்ந்தவர். ஈரோடு கிழக்கு தொகுதி டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையை பெற்று தேர்தலுக்காக செலவு செய்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிவருகிறார். ஓ. பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி பயணித்து வருகிறார். இப்போது அவர் ஆட்டக்களத்தில் இல்லை.