தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயகுமார் ஜாமீன் மனு காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு - former minister Jayakumar bail petition court orders police to respond

கள்ள ஓட்டுப் போட முயன்றாக திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கித் தாக்கிய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் கோரிய மனுவுக்கு காவல்துறை பதில் அளிக்கச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயகுமார் ஜாமீன் மனு காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
ஜெயகுமார் ஜாமீன் மனு காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

By

Published : Feb 24, 2022, 1:10 PM IST

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டுப்போட முயன்றாக புகார் எழுந்ததையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அதிமுக-வினர் அங்கிருந்த திமுக பிரமுகர் நரேஷை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தைத் தனது முகநூல் பக்கத்தில் ஜெயக்குமார் லைவாக காட்டியதால், வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் நரேஷ் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 21ஆம் தேதி கைதாகி மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார், ஜாமீன் கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயக்குமார் மீதான வழக்கில் கொலை முயற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜெயகுமார் ஜாமீன் மனு காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (பிப்.24) விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு தங்களுக்கு வரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புகார் தாரர் நரேஷ் தரப்பில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்க ஜெயக்குமார் தரப்பிற்கும், அதற்கு விளக்கம் அளிக்க காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புகார்தாரர் நரேஷ் தரப்பு ஆட்சேபத்தை இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை (பிப்ரவரி 25) தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: Valimai FDFS:செண்டை மேளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details