சென்னை அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை, மாணிக்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் குரு. அதிமுகவைச் சேர்ந்த இவர் 2015ஆம் ஆண்டு மாநகராட்சியின் 86ஆவது வார்டில் கவுன்சிலராக இருந்தார். இந்நிலையில், இந்த பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த வார்டில் உள்ள ஒரு நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்றி தர வேண்டும் என குருவிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு குரு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 30.9.2015 அன்று வீட்டில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் குருவை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
முன்னாள் அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(30), பிரவீன் குமார்(32), ராஜ்குமார்(29), பிரவீன்குமார்(29), ஸ்ரீதர்(23), ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா தலைமையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், ஐந்து பேர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.