சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் வேட்புமனுதாக்கலுக்கு பின்னர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை கொடிகட்டி இருக்கிறது. இளைஞர்கள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது” என விமர்சித்தார்.
தொடர்ந்து, “தமிழ்நாடு காவல்துறை தலைவராக இருக்கக்கூடிய டிஜிபி ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். அரசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களும் கைகோர்த்து கொண்டு செயல்பட்டு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடி வருகிறது” என்றார்.
மேலும், காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டாலேயே தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும் எனவும் தெரிவித்த அவர் திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும்; மாறாக அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.