சென்னை:சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் 76ஆவது நினைவு தினத்தை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவகத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான டி. ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "இந்தியாவில், பொதுவுடமை தத்துவத்தைக் கொண்டுவந்து, மே தினம் வர காரணமான பெருமை சிந்தனை சிற்பி சிங்கார வேலருக்கு மட்டுமே உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக மக்கள் ஆதரவை இழந்துள்ள திமுக அரசு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக இரவோடு இரவாக சாலை போடுவது, வரி விகிதங்களை குறைப்பது போன்ற தேர்தல் நடத்தை விதிகளை மீறி திமுக அரசு செயல்படுவதற்கான ஆதாரங்கள் உள்ளன.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் தற்போது 85 விழுக்காடு தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றி விட்டதாக, பொய்யான தகவல்களை மக்களிடத்தில் கூறி வந்தாலும், அவற்றை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமையும்.