சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்.6 ஆம் தேதி தொடங்கியது. இதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் நான்காவது நாளான இன்று (ஏப்.11) உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பதிலுரை நிகழ்த்துகின்றனர். சட்டப்பேரவை தொடக்கியபோது கேள்வி நேரத்தில் பேசிய திருப்போரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி, திருப்போரூர் ஒன்றியம் மானம்பதி மற்றும் காட்டுப் பகுதிகளில் பல்லுயிர் பூங்கா அமைக்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.
திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி இதற்குப் பதில் அளித்துப் பேசிய வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன், "செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர் நகரில் 146 ஏக்கர் பரப்பளவில் புதிய தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
மேலும் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண்டுதோறும் 25 லட்சம் பார்வையாளர்கள் வருவதாகத் தெரிவித்தார். மேலும் பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது" என்றார்.
சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ஆர். ராமச்சந்திரன் அதன் பின், மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக் கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், மானியக் குழுவின் நிதி உதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யூ.இ.டி) மூலம் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள்.
என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு நம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும்.
இந்த நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.
மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும். எனவே மாநில அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு, மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கு சேர்வதற்காக நடத்த இருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட மத்திய அரசினை வலியுறுத்துகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ் இசைக்கு திமுக அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு