சென்னை:நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டு 40க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் நாமக்கல் முழுவதும் ஷவர்மா உணவு விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த சோதனையில் கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் சுத்தமானதாகவும், சுகாதாரமான முறையிலும் இருக்கிறதா எனவும், உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதன் எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் நடத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள் அதிகம் காணப்படும் அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மேலும், 10க்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மண், தூசி, வாகனப்புகை விழும் அளவிற்கு சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த ஷவர்மா கடைகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து முறையாக பராமரிக்கப்படாமல் நீண்ட நாட்களாக இருந்த சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை வைத்து இருந்த துரித உணவு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த ஆய்வில், கிலோ கணக்கில் இறைச்சி உணவுகள் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும், துரித உணவிற்கு பயன்படுத்தப்படும் பாசுமதி அரிசி, சுவரோடு சுவராக ஒட்டி வைத்து இருந்த சாப்பாடுகளும் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் போஸ் உள்ளிட்ட 3க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அம்பத்தூரின் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு விவகாரம்.. சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ரெய்டு... 350 கிலோ உணவுகள் பறிமுதல்!