சென்னை: சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செங்கல்பட்டு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் பல்வேறு உணவுக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் முறையான பாதுகாப்பு இல்லாமல், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் அதை சரிசெய்யவும் அறிவுறுத்தினர்.
அதன்படி, சேலம் ஆர்.ஆர். பிரியாணி (SALEM RR BIRIYANI) கடையில் கெட்டு போன முட்டையை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர். தடை செய்ய்ப்பட்ட பிளாஸ்டிக் கவரை பறிமுதல் செய்து கடுமையாக எச்சரித்தார். பின்னர், மதுரை எம்.கே.என்.(MADURAI M.K.N) இட்லி கடையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததும், உணவு சான்றிதழ் இல்லாததால் உணவகத்தை மூட உத்தரவிட்டார்.
அதன் பின், ஐஏஎப் சாலையில் உள்ள கேரளா உணவகமான ஹரிதகம் உணவகத்தில் ஆய்வு செய்து அதிலிருந்து கெட்டு போன சிக்கன், மட்டன், இறால், மாட்டு இறைச்சி அனைத்தையும் குப்பையில் கொட்டி அழித்தனர். உணவு சான்றிதழ் இல்லாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டு உணவகத்தை மூட உத்தரவிட்டார். சான்றிதழ் பெற்று குளிர்பதன பெட்டியை புதிதாக மாற்றவும் அறிவுறுத்தினர். சான்றிதழ் பெறாமல் உணவகத்தை மீண்டும் திறந்தால் சீல் வைக்கப்படும் என கடுமையாக எச்சரித்தனர்.