தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடைப்பிரதமன் பாயாசம் முதல் பீடா வரை.. கமகமத்த அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்! - எடப்பாடி பழனிசாமி

Food menu in AIADMK GC: சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் தம்ப்ரூட் அல்வா முதல் பால்கறி கூட்டு வரையிலான அறுசுவை சைவ விருந்து வழங்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 3:47 PM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, முதன் முதலாக அக்கட்சியின் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் இன்று (டிச.26) நடைபெற்றது. சென்னை வானகரத்தில் உள்ள அதிமுகவின் ஆஸ்தான மண்டபமான ஸ்ரீவாரு பேலஸில் வைத்து காலை 10.30 மணியளவில் கூட்டம் தொடங்கியது. இதற்காக வந்த எடப்பாடி பழனிசாமி, முதலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, மிக்ஜாம் மற்றும் தென்மாவட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் இருப்பதற்கு கண்டனம், நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்திட மத்திய அரசை வலியுறுத்தல், காவிரி நதிநீர் பிரச்னை மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட சூளுரை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் 21 வகைகளுடன் அறுசுவை சைவ விருந்து தயாராகியது. வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் அழைத்து வரப்படுவர். அவ்வாறு வருபவர்கள், கூட்டம் நடைபெறும் இடத்திலும், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பும் வரவேற்பதற்காக காத்திருப்பது வழக்கம்.

இவ்வாறு இருக்கும் தொண்டர்கள் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும், காவல்துறை மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் அறுசுவை விருந்து தனித்தனியான பந்தல்களில் வழங்கப்படும். இப்படியான அறுசுவை சைவ விருந்தில் இம்முறை 21 பாதர்த்தங்கள் பரிமாறப்பட்டு உள்ளது. அந்த வகையில், இனிப்பாக தம்ப்ரூட் அல்வா மற்றும் அடைப்பிரதமன் பாயாசம் என்ற வித்தியாசமான உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன.

அதேபோல், பொரியல் வகைகளாக புடலங்காய் கூட்டு, கோஸ், பீன்ஸ், கேரட், பட்டாணி கலந்த பொரியல், பால்கறி கூட்டு, உருளைக்கிழங்கு மசாலா, வெண்டிக்காய், மொச்சை மண்டி மற்றும் மோர் மிளகாய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் வத்தக்குழம்பு, தரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ் கலந்த சாம்பார், போண்டா மோர் குழம்பு, தக்காளி ரசம், தயிர், பருப்பு நெய் ஆகியவற்றுடன் பருப்பு வடை, அப்பளம் மற்றும் ஊறுகாய் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வெஜ் பிரியாணி உடன் தொடங்கிய விருந்து வாழைப்பழம், ஐஸ்கிரீம், பீடா போன்ற செரிமான பதார்த்தங்கள் உடன் நிறைவு பெற்று உள்ளது. மேலும், ஆட்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, அனைவருக்கும் தனித்தனியாக குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு பொதுக்குழு கூட்டத்தில் அனைவருக்கும் விருந்தளிப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது காலத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் - முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details