டெலிவரி செய்து வரும் நபர் செல்போன் திருடும் சிசிடிவி காட்சிகள் சென்னை: தாம்பரம் அடுத்த காமராஜபுரத்தைச் சேர்ந்தவர், ராஜேஷ் (44). இவர் நேற்று தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அப்போது பைக்கில் செல்போன் மற்றும் 1,500 ரூபாய் பணத்துடன் கூடிய பர்ஸ் ஆகியவை இருந்துள்ளது. பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது செல்போன் மற்றும் பர்ஸ் காணாமல் போனதை அறிந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ராஜேஷ் ஆய்வு செய்துள்ளார். அதில் பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தில் டெலிவரி செய்வதற்காக வரும் நபர் ஒருவர்தான், பைக்கில் இருந்து செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மீண்டும் அதே நபர் அப்பகுதியில் டெலிவரி செய்ய வந்துள்ளார். அப்போது உடமைகளை பறிகொடுத்த ராஜேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்துள்ளார். அப்போது திருட்டில் ஈடுபட்டதை பிடிபட்ட நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த நபரை சேலையூர் காவல் துறையினரிடம் ராஜேஷ் உள்பட பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். மேலும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை அடையாளம் கண்டு உடனடி நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:செல்போன் திருடிய நபர் உயிரிழப்பு - காவல்துறை மீது புகார்!