சென்னை: சென்னை முகப்பேரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மோசடி தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நாக்ரி, லிங்க்டு இன் (Naukri, Linkedin) போன்ற இணையதளத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும், அப்போது வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக விளம்பரம் ஒன்று வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதில் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக கூகுள் பக்கத்தில் ஆய்வு செய்தபோது, சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் கிடைக்கும் என போடப்பட்டிருந்ததால் நம்பி முதலில் லிங்கை க்ளிக் செய்து சப்ஸ்க்ரைப் செய்ததாக தெரிவித்தார்.
உடனே வாடஸ் அப் எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அனுஷ்யா என்பவர், 150 ரூபாய் வங்கிக் கணக்கில் அவர் செலுத்துவார் என கூறியுள்ளார். பின் அனுஷ்யா 150 ரூபாய் அனுப்பிய பிறகு, தொடர்ந்து பணம் சம்பாதிக்க டெலிகிராம் குரூப் ஒன்றில் இணைத்ததாக கூறியுள்ளார்.
அதில் சப்ஸ்க்ரைப் செய்ய யூடியூப் லிங்குகள் பெற பல்வேறு பேக்கேஜ்கள் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் 1,000 ரூபாய் செலுத்தி 1,300 ரூபாயும், பின் 5,000 ரூபாய் செலுத்தி 6,500 ரூபாயும் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார். 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி தொடர்ந்து பணம் சம்பாதிக்க நினைத்ததாகவும், இதே போல 18 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வரை செலுத்திய பின் பணம் திரும்ப கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த நபர் ஏற்கனவே தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கும், டெலிகிராம் எண்ணிற்கும் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதை அறிந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளதாக கூறியுள்ளார். எனவே, தான் ஏமாந்த 18 லட்சம் பணத்தை மீட்டுத் தருமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் மூலமாக வேலை தேடும் நபர்களை குறி வைத்து வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு, பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதன முறையில் சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.