சென்னை:சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில்கடந்த 19ஆம் தேதி ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்னை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டினர். காயம்பட்ட ராஜேஸ்வரியை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல் துறையினர், கொலைக் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், பெண்ணை கொலை செய்த சக்திவேல் (23), ஜெகதீஷ் (23), சூர்யா (19), ஜான்சன் (19), நாகவல்லி (23) ஆகிய ஐந்து பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் பொன்ராமு, தாம்பரம் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்து 5 பேரை கைது செய்துள்ளோம். பல்வேறு மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 பேர் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் நங்கநல்லூரில் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி கேமராக்களை அமைப்பதை துரிதப்படுத்தி உள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை ரயில்வே காவல் துறையினர் உறுதி செய்வோம். கொருக்குப்பேட்டையில் ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.