நொச்சிக்குப்பத்தில் அருள்மிகு எல்லையம்மன் பழண்டியம்மன் திருக்கோயில் இரண்டு ஏக்கர் 2,059 சதுரடி நிலத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலமானது, அங்கு வாழும் மீனவ மக்களின் நலன்கருதி மன்னர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலம் மீனவ மக்களின் குல தெய்வமான பழண்டியம்மன் கோயில் பெயரில் பட்டாவாக பதியப்பட்டு, மீனவ மக்களின் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டுவந்தது.
பின்னர், இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குக் கீழ் சென்ற இந்த நிலமானது, சிட்டி சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் மீனவ மக்களின் அறங்காவலர்களிடம் ஆளுகையின் கீழ் வந்தது.
இந்த நிலையில், மீண்டும் தற்போது புதியதாக இந்து சமய அறநிலையத் துறை அலுவலராக பொறுப்பேற்றுள்ள கங்காதேவி என்பவர் சில தனியார் தொழிலதிபர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, அந்த நிலத்தில் குடியிருக்கும் மீனவ மக்களுக்குப் பல துன்பங்களைக் கொடுத்தும், தண்டம் என்ற பெயரில் புதிய வரி வரம்புகளைக் கட்டச்சொல்லியும், அங்கிருக்கும் நிலங்ளைக் காலி செய்து வேறு பகுதிக்குச் செல்ல தொடர்ந்து வற்புறுத்திவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து மீனவ மக்களின் நிலத்தை விடுவித்து அரசாணை வழங்கிடவும், பழைய மீனவ அறங்காவலர்களை நியமிக்கும்படியும் வலியுறுத்தி நொச்சிக்குப்பம் பழண்டியம்மன் கோயில் நலசங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.