சென்னை காசிமேட்டில் ஊரடங்கு உத்தரவினால் 110 நாள்களாக பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் ஊரடங்கை கடைபிடித்தனர். இந்நிலையில், மீன்பிடி தடை காலம் நிறைவு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு அனுமதியளித்தது.
ஆனால் கடலில் பிடித்து வரும் மீன்களை விற்பதற்கு காவல் துறையினர் கெடுபிடி விதித்ததால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர். பெரிய விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பதற்கு ஏற்பாடு செய்தால் மட்டுமே மீன்களைப் பிடிக்க கடலுக்கு செல்வோம் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து 110 நாள்களாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மீனவர்கள் மீன்வளத் துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 15) இரவு முதல் குறைந்த அளவு படகுகள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.