தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்கள் ருசியானவை... மீனவர்களின் வாழ்க்கை...? - மீனவர்கள் படும் பாடு

சென்னை: மீன்பிடித் தடைக்காலம் மற்றும் வானிலை மையத் தடைக்காலங்களில் மீனவர்கள் சந்திக்கும் இழப்புகளை அரசு என்று தான் சரிசெய்யப்போகிறதோ என்று வேதனை தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.

fisherman
மீன்கள் ருசியானவை...மீனவர் வாழ்க்கை

By

Published : Dec 4, 2019, 4:39 PM IST

கோடைக் காலத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 60 நாட்கள் வரை மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருவாயற்ற அந்தக் காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், வலை பின்னுதல், படகுகளைப் பழுது பார்த்தல் உள்ளிட்ட தங்கள் தொழில் சார்ந்த மற்ற வேலைகளைச் செய்து வருவர்.

இக்கால கட்டத்தில், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசால் வழங்கப்படும் இதுபோன்ற உதவித்தொகைகள் மீனவர்களுக்குச் சற்று ஆறுதலாக இருக்கிறது என்றாலும், அவை போதுமானவையாக இல்லை என மீனவர்கள் புலம்புகின்றனர்.

மீன்கள் ருசியானவை...மீனவர் வாழ்க்கை...?

அதேபோல் புயல், மழைக்காலங்களில் வானிலை மைய எச்சரிக்கையால் மீனவர்கள் பல நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிவதில்லை. மீன்பிடித் தடைக்காலத்தை விட அதிக நாட்கள் வேலையிழக்கும் மழைக் காலத் தடைக்கான இழப்பீட்டை அரசு தங்களுக்கு வழங்குவதில்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கர்ணா என்ற மீனவர் கூறுகையில், "வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை மீறி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் போது அரசு அதற்கான பொறுப்பை ஏற்பதில்லை. மழைக் காலங்களில் இது போன்ற எச்சரிக்கை அறிவிப்புகள் வாரம் ஒருமுறையாவது வருவதால், 40 நாட்களுக்கும் மேலாக வாழ்நிலை பாதிக்கப்படுகிறது" என்றார்.

மீனவர் கர்ணா

முருகன் என்ற மற்றொரு மீனவர் இதுகுறித்து கூறுகையில், "இதுபோல கடலுக்குச் செல்லமுடியாத காலங்களில் வட்டிக்குக் கடன் பெற்றே குடும்பத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, மழைக் காலத் தடை நாட்களையும் கணக்கில் கொண்டு அரசு உதவித்தொகை வழங்கினால், பட்டினியின்றி வாழ வழி ஏற்படும்" என்கின்றனர்.

மீனவர் முருகன்

'ஒருநாள் போவார் ஒருநாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம்... ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை, ஊரார் நினைப்பது சுலபம்' என்கிறது திரைப்பாடல். ஊரார் சுலபமாக நினைக்கலாம்... அரசு அப்படி நினைக்கலாமா என்பதே, இழப்பீடு இன்றித் தவிக்கும் மீனவர்களின் கேள்வியாக இருக்கிறது.

இதையும் படிங்க: கடலாடிகளின் போராட்டங்கள் நெஞ்சுரத்தைத் தருபவை - இன்று உலக மீனவர்கள் தினம்!

ABOUT THE AUTHOR

...view details