சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வீணாகும் மீன் கழிவுகளை அரைத்து இறால் பண்ணைகளில் இறால் வளர்க்கப் பயன்படும் பாசி உற்பத்தி செய்யும் உரமாகவும், வேளாண் பண்ணைகளில் செடிகளுக்கு பூச்சி மருந்தாகப் பயன்படும் உரமாகவும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு நம்பிக்கை மீனவர்கள் குழு என்ற பெயரில் முதலில் சுய உதவி குழுக்கள் மூலமாகத் தொடங்கப்பட்ட இந்த தொழில் தற்போது நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.
அகில இந்திய மீனவர் சங்க தேசிய செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவன இயக்குநர் ஜித்தேந்திரன், ஆராய்ச்சியாளர் டாக்டர் முத்துலட்சுமி, சந்தீப், சாய்ராம், காசிமேடு பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவன மூத்த ஆராய்ச்சியாளர் மகாலட்சுமி கூறியதாவது, "கழிவிலிருந்து செல்வம் என்ற திட்டத்தின்படி மீன் கழிவுகளிலிருந்து இந்தப் பொருள்கள் தயார்செய்யப்பட்டு-வருகின்றன. இந்தத் திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய தூய்மைத் திட்டத்தினைத் தொடர்ந்து பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இங்கு மீன் கழிவுகளிலிருந்து பிளாங்டான் பிளஸ், ஹார்டி பிளஸ் ஆகிய இரண்டு உர பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இது சுமார் ரூ.80 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இவை தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுவருகின்றன.