சென்னை: தமிழ் சினிமாவின் தற்போதைய காந்த சக்தியாக இருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசி வரும் உன்னதமான படைப்பாளியாக அறியபடுபவர். தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திலேயே அதனை உரக்கப் பேசியவர்.
தாழ்த்தப்பட்ட மகக்ளை சேர்ந்த ஒருவனின் வாழ்க்கையின் வலியை நம்முள் கடத்தியவர். நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி ஆகியோரின் நடிப்பில் வெளியான இப்படம் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது. யார் இந்த மாரி செல்வராஜ் என்று ரசிகர்கள் மத்தியில் புருவம் உயர்த்திய படமாக இவருக்கு அமைந்தது. இதனை தொடர்ந்து தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் உடன் கைகோர்த்தார்.
இவரது இரண்டாவது படமான கர்ணன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. முன்னணி நடிகரின் வாயிலாக காழ்ப்புணர்ச்சி அரசியலை தீர்க்கமாக பேசினார் மாரி செல்வராஜ். கரோனா காலத்தில் வெளியான கர்ணன் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது தனது மூன்றாவது படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியுள்ளார்.
அந்த படத்திற்கு மாமன்னன் எனறு பெயரிட்டுள்ளார். இது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கூடுதலாக நடிகர் வடிவேலு ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.