கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஜெ. அன்பழகன் (62) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜெ. அன்பழகனுக்கு ஜூன் 2ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடைய பிறந்தநாளான இன்று (ஜூன் 10) அவர் உயிரிழந்துள்ளார். அன்பழகனின் மரணம் என்பது திமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு நிற்கவில்லை, மக்கள் நலனில் அக்கறை தேவை என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை திமுக சந்திக்கவுள்ள நிலையில், மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அன்பழகன் உயிரிழந்திருப்பது திமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா சூழலில் அவதிக்குள்ளான ஏழை, எளிய மக்களுக்கு உதவ ஐபேக் வகுத்துத் தந்த ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை, சென்னை மேற்கின் மாவட்ட செயலாளர் என்ற முறையில் முன்னின்று செயல்படுத்தி வந்தவர் அன்பழகன். ஜூன் 1ஆம் தேதி வரை அவர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
ஜூன் 2ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே அவரது உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ரீலா மருத்துவ மையம் ஜூன் 4ஆம் தேதி வெளியிட்ட தகவலின்படி, அவருக்கு வென்டிலேட்டர் உதவியின் மூலம்தான் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு கூட அவர் உடல்நிலை தேறியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அன்பழகன் மறைவுக்குப் பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின், கரோனா சூழலில் பணி செய்யும் தனது கட்சி உறுப்பினர்களையும், மற்ற அரசியல்வாதிகளையும் உடல்நிலையை பார்த்துக்கொள்ளும்படி தெரிவித்திருக்கிறார்.