சென்னை:தீபாவளி பண்டிகை நேற்று (நவ.12) தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் காலை முதலே பட்டாசுகள் வெடி சத்தம் விண்ணைப் பிளந்தது.
காலை ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், எவ்வித உத்தரவுகளையும் கடைபிடிக்காமல் காலை 6 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை இடைவிடாமல் சென்னையின் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
இரவு நேரங்களில் வெடிக்கப்பட்ட வான வேடிக்கைகள் இரவை பகலாக்கின. இருப்பினும், அரசு வழிகாட்டிய உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாததால் பல்வேறு இடங்களில் தீ விபத்துகளும் நேரிட்டன. குறிப்பாக, மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்று தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயணைத்தனர்.