சென்னை: மணலியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.பி.சி.எல் (CPCL - Chennai Petroleum Corporation Limited) பெட்ரோலிய நிறுவனத்தில் இன்று (டிச.16) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், அந்த பகுதியில் பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெறியேற்றப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளன.
சி.பி.சி.எல் பெட்ரோலிய நிறுவனம் என்பதால் பாதிப்பு பெரிய அளவில் இருக்கக் கூடாது என்பதற்காக தீ விபத்து ஏற்பட்டவுடன் முன்னெச்சரிக்கைக்காக நிறுவனத்தில் உள்ள தீயணைப்பு உபகரணங்கள் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்துத் தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சிபிசிஎல் நிறுவனத்தில் தார் செல்லக்கூடிய ராட்சத குழாயில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்திற்கு அருகில் பல மீனவ கிராமங்களும், குடியிருப்பு பகுதிகளும் இருப்பதால் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.