தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கான இடங்களை கவுன்சிலிங் முறை மூலமாக நிரப்ப உத்தரவிடக்கோரி தீரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கைரேகைப் பதிவுகளை தேசிய தேர்வு முகமையிடம் பெற்று சிபிசிஐடி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், நீட் தேர்வு எழுதிய 7000 மாணவர்களின் கைரேகைப் பதிவுகளை மறு ஆய்வு செய்ய குறைந்தபட்சம் 90 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தொழிற்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த நிலையில் கால அவகாசம் வழங்க முடியாது. இரண்டு வாரத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், காவல் துறை, ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவர்களின் ஊதியம் குறைவாக இருப்பதாகவும், அதை உயர்த்தி வழங்கலாமே எனவும் தமிழ்நாடு அரசுக்கு யோசனை தெரிவித்தனர்.
சிபிஐ சார்பாக ஆஜரான வழக்குரைஞர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக கேரளா, தமிழ்நாட்டிலிருந்து இரண்டு புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட துறைக்கு அது மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எதிர்காலத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறாமல் தடுக்க மருத்துவக் கல்வி இயக்குநரகமும் மாணவர்களிடம் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.