சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனியார் தொலைக்காட்சியின் ‘சென்னை டவுன் ஹால்’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றுக்கும் வளர்ச்சிக்கும் தெற்கின் பாடங்கள் அடிப்படையானவை என்பதைத்தான் இதுவரை சொல்லி வந்தோம்.
அதனை தொலைக்காட்சியும் இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் வரலாற்றுக்கும் வளர்ச்சிக்கும் தெற்கு வழிகாட்டுகிறது என்று நாங்கள் சொல்வதை, மொழிப்பற்றால் - இன உணர்வால் சொல்வதாக யாரும் நினைக்கக் கூடாது. வரலாறு சொல்லும் பாடம் என்பதும் அதுதான்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட சமூகமாக கீழடியிலும், ஆதிச்சநல்லூரிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இந்த வரலாறு சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பதே தெற்கில் இருந்துதான் முதன்முதலில் தொடங்கியது.
கிழக்கிந்தியக் கம்பெனி உருவாகி அடிமைப்படுத்துதல் உருவானபோதே அதற்கு எதிரான விடுதலை முழக்கமிட்ட மண், இந்தத் தென்னக மண். இந்தியர்களுக்கு ஓரளவு நிர்வாக சுதந்திரம் தரலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, இரட்டையாட்சி முறை 1920 ஆம் ஆண்டு உருவானது.
அப்போது அந்த இரட்டையாட்சி முறையை முறைப்படி நடத்தி மக்களாட்சியின் மாண்பைக் காத்த அரசு அன்றைய சென்னை மாகாண நீதிக்கட்சியினுடைய அரசு. அன்றைக்கு சென்னை ராஜதானி சட்டமன்றத்தின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப்போல இருக்கும் என்று சொல்லி அயல்நாடுகளில் இருந்து வரக்கூடிய பார்வையாளர்கள் நம்முடைய சட்டமன்றத்தை வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்கள்.
சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வகுப்பின் அளவுக்கு தகுந்த இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி உரிமையை வழங்கியது தமிழ்நாடு. பெண்களுக்கு வாக்குரிமை என்பது 1921 ஆம் ஆண்டே சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. சாதியின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என முதன்முதலாக சட்டம் போட்டது தமிழ்நாடு.
இந்தியாவின் மாநிலங்கள் மொழிவழியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று முதலில் சொன்னது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை நிலைநாட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யக் காரணமானது தமிழ்நாடு.
‘சென்னையில் நடந்த போராட்டங்கள் காரணமாகத்தான் இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது” என்று பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதன் மூலமாகத்தான் இந்தியாவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இருந்த தடைகள் மொத்தமாக நீக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல் ஆணையத்தால் வழங்கப்பட வேண்டிய 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டு உரிமையை நிலை நாட்ட தொடர்ந்து போராடியது, திராவிட இயக்கம். வி.பி.சிங்-ஐ பிரதமராக ஆதரித்து, அதனைச் செயல்படுத்திக் கொடுத்ததன் மூலமாகத்தான், இந்தியாவில் இருக்கும் அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களும் தடையின்றி நிர்வாக அதிகாரம் பெற வழிவகை செய்தது தமிழ்நாடு.
மாநில சுயாட்சிக்காக 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதன் மூலமாக மாநில சுயாட்சி நிலைக்கவும், இந்தியாவில் கூட்டாட்சி செழிக்கவும் அடித்தளமிட்டவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி. ஆகஸ்ட் 15 ஆம் நாள், விடுதலை நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றலாம் என்ற உரிமையைப் பெற்றுத் தந்தவரும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி.
இன்றைய நாள் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் வியந்து பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் சேர்க்கையாக திராவிட மாடல் அமைக்கப்பட்டுள்ளது.