சென்னை:சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், 2022ஆம் ஆண்டுக்கான முதல்நிலை பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டு வகுப்பை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, "பயிற்சி முகாமினை முறையாகவும், செம்மையாகவும் பின்பற்றுபவர்கள் படிப்படியாக உயர்ந்து அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வருபவர்களாக திகழ்வர்.
தமிழ்நாட்டின் முதல் அரசு பயிற்சி மையம் இதுவாகும். இங்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மூத்த ஆட்சி பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு இரண்டு சுற்றுகளாக நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு எழுதும் தேர்வாளர்களுக்கு பயிற்சி மையமாக இல்லாமல் ஒரு வழிகாட்டியாக இந்த மையம் அமைந்துள்ளது" என்றார்.
சீர்திருத்தக்குழு அமைப்பு:தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சி கையேடுகளை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர், "கல்வியின் மூலம் மனித வள மேம்பாடு என்பது மட்டுமல்லாது பாரம்பரியம், இலக்கியம், இலக்கு ஆகியவற்றை கற்றுக் கொள்ளமுடிகிறது. இப்பயிற்சி முகாம் தேர்வர்களுக்கு வழிகாட்டியாக செயல்படும். நான் கேட்காமலேயே துறைகளிலேயே சிறந்த துறையான மனிதவள மேலாண்மைத்துறையை முதலமைச்சர் எனக்கு வழங்கியுள்ளார்.
நிதித்துறையை காட்டிலும் மிக முக்கியமான துறையாக நான் பார்ப்பது மனிதவள மேம்பாட்டுத்துறையைத் தான். தமிழ்நாட்டில் துறைவாரியாக வளர்ச்சிகளை பெறுவதற்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு முன்னெடுப்புகள் இருந்தாலும் மனித வள மேம்பாட்டுத்துறை என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
19 பேர் தேர்ச்சி:தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டாலும் இன்றும் 300 ஐஏஎஸ் அலுவலர்கள் உள்ளனர். இதனை அதிகப்படுத்த வேண்டும். திறமையானவர்களை தேர்ந்தெடுப்பது, பயிற்சி அளிப்பது, மேம்படுத்துவது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, சீர்திருத்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
திராவிடக் கட்சிகளின் கொள்கையின் படி மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி இன மக்கள் கல்வியின் விளிம்பு நிலைக்கு கீழ் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை அரசு துறையில் உயர் பதவி இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளை இப்பயிற்சி முகாம் செய்து வருகிறது.2021ஆம் ஆண்டு நடத்திய நேர்முகத் தேர்வு மூலம் 19 பேர் தேர்ச்சி பெற்று ஆட்சிப் பணிக்கு சென்றுள்ளனர்" என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அரசுச் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா, சவுந்தர் பதவியேற்பு