சென்னை:நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.
நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி, அர்ஜூன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
இதனை அடுத்து இன்று (டிச.29) காலை சுமார் 6:00 மணியளவில் விஜயகாந்தின் உடல், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன், சென்னை உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவுத்திடலில் கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளது. இங்கு ரஜினிகாந்த், பார்த்திபன், ராதா ரவி, பாக்கியராஜ், உள்ளிட்ட பல நடிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.