திரைப்படத்தை ஆன்லைனில் (OTT- Over The Top, அதாவது, திரைப்படங்களை வழக்கமான முறைப்படி அல்லாமல், இணையம் வழியே வெளியிடுவது) வெளியிடுவது குறித்து கடந்த சில நாள்களாக திரைத்துறையில் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, தியாகராஜன், சித்ரா லக்ஷ்மணன், பெப்சி சிவா, இயக்குநர் மனோபாலா, சுரேஷ் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ”திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.
அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன்வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பிரச்னைகள் பெரிய நடிகர்கள்-இயக்குநர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.
இந்தி, தெலுங்கு, மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கரோனா லாக் டவுன் சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள்.