சென்னை:தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படுபவர் தான் நயன்தாரா. தனது இயல்பான நடிப்பாலும், அசர வைக்கும் அழகாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்த இவர், ரஜினி தொடங்கி தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
அதேபோல் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்கள் பட்டாளத்தை அள்ளிய இவர், தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். நடிகர்கள், நடிகைகள் என்றாலே கிசு கிசுப்பிற்கு பஞ்சம் இல்லை என சொல்லும் அளவிற்கு நயன்தாரா திருமணம் குறித்தும், கிசி கிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவி பக்கங்களை நிறைத்தன.
இந்நிலையில் சிம்புவை வைத்து “போடா போடி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாரா இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் மலர்ந்து வந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் லிவ்விங் ரிலேஷனில் வாழ்ந்து வந்ததாக சர்ச்சைகள் கிளம்பின. மேலும், இவர்கள் இருவரும் ஒன்றாக வலம்வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி, கடந்த ஆண்டு (2022) ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி பகுதியில் உள்ள 'ஷெரட்டன் கிராண்ட்' நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இதில் அவர்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், திரைப் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், திருமண தம்பதிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். ஆனால், திருமணம் ஆன நான்கு மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக இணையத்தில் நயன் - விக்கி தம்பதி அறிவித்தனர்.
“அது எப்டி குமாரு நாளு மாசத்துல?” என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பிய நிலையில், இருவரும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக வெளியிட்ட அறிவிப்பால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். வாடகைத் தாய் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தரப்பில் இருந்து விளக்கங்கள் அளிக்கப்பட்ட நிலையில், அந்த பேச்சுக்கள் அடங்கின.
பின்னர் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன் என்றும் மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்விக் என் சிவன் என்றும் பெயர் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வித்தியாசமான பெயர்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இருப்பினும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் தங்கள் கடமைகளில் இருந்து தவறவில்லை.
தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவே கோலாகலமாக காணப்பட்டு வரும் நிலையில், நடிகைகள் பலரும் ஓணம் லுக்கில் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் சிவன் தனது வீட்டில் கொண்டாடப்பட்ட ஓணம் போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து, எங்கள் குழந்தைகளான உயிர், உலகம் இருவருடனுமான எங்களின் முதல் ஓணம் என குறிப்பிட்டிருந்தார். மேலும் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தில் குழந்தைகள் உயிர், உலகம் இருவரும் வாழை இலை முன்பு அமர்ந்து உணவு சாப்பிடும் காட்சி இருந்ததைத் தொடர்ந்து, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், "அட அதுக்குள்ள இவ்ளோ வளர்ந்துட்டிங்களா!" என பதிவிட்டு வருகின்றனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தைகளது புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், இந்த புகைப்படங்கள் பலரது மனதையும் கவர்ந்த நிலையில், குழந்தைகளுக்கு ரசிகர்கள் தங்கள் அன்பை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Jailer: தலைவர் படம்னா ஜாக்பாட் தான்... ஜெயிலர் பட வசூல் இவ்வளவா?