சென்னை: தமிழ் சினிமா நடிகரும், முன்னணி இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தனது மனைவி ஃபாத்திமா மற்றும் இரண்டு மகள்களோடு சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மீரா (16), ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் அனைவரும் ஒன்றாக உணவு உண்டபின் மீரா தனது அறையில் தூங்குவதற்காகச் சென்று உள்ளார். அதையடுத்து, அதிகாலை 3.30 மணியளவில், விஜய் ஆண்டனி தனது மகள் மீராவின் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, வீட்டில் பணிபுரிந்து வந்த ஊழியர்களின் உதவியோடு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விஜய் ஆண்டனி தனது மகள் மீராவை காரில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தேனாம்பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மீரா கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததும், இதற்காக அவர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.
மேலும் மீரா கடந்த சில வாரங்களாகவே, வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுடன் சரியான முறையில் பேசாமல் தனிமையில் இருந்து வந்ததும் போலீசரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், தற்கொலை செய்து கொண்ட மீராவின் தந்தை விஜய் ஆண்டனி, அவரது தாய் ஃபாத்திமா, சகோதரி ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மீரா மேற்கொண்டு வந்த சிகிச்சை தொடர்பான ரிப்போர்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், எந்த விதமான மன அழுத்தத்தில் மீரா சிக்கியிருந்தார் என்பது குறித்து மீராவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்பது உள்ளிட்ட கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.