பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அலுவலர் அளித்துள்ள பாலியல் புகார் காவல் துறை வட்டாரங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக மக்களைவை உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியதை அடுத்து, பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு விசாகா கமிட்டியை அமைத்தது.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாய காத்திருப்பில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. பெண் ஐபிஎஸ் அலுவலர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளிக்க முடிவு செய்தார்.
இதுதொடர்பாக சென்னைக்கு வந்து கொண்டிருந்த பெண் அலுவலரை செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர், பெண் அலுவலரிடம் சிறப்பு டிஜிபி குறித்து புகார் அளிக்க கூடாது என வற்புறுத்தி அவரை திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.