சென்னை ஐ.ஐ.டியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப். இவர், கடந்த நவம்பர் 8ஆம் தேதி, தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். பேராசிரியர்கள் சிலர் அளித்த மத ரீதியான துன்புறுத்தலால்தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாக ஃபாத்திமா, தன் செல்ஃபோனில் குறிப்பு எழுதி வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைக்கோரி காவல்துறை இயக்குநர் திரிபாதியை மாணவி ஃபாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் நேரில் சந்தித்து புகாரளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ' தனது மகள் ஃபாத்திமா திறமையான மாணவி, ஐ.ஐ.டி நுழைவுத் தேர்விலும் முதலிடம் பிடித்தே அங்கு படிக்கச் சென்றார். ஆகையால், குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு குன்றிய மனநிலை அவருக்கு இல்லை.
மேலும், எனது மகள் அலைபேசியில் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மரணத்திற்குக் காரணமான, சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சுதர்சன் பத்மநாபன் மட்டுமல்லாமல் மேலும் பல ஐ.ஐ.டி நிர்வாகிகளும் எனது மகளின் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எனது மகள் பதிவுசெய்து வைத்துள்ள விரிவான வாக்குமூலத்தையும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரிடம் வழங்கியுள்ளேன்.