தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Father's Day: தந்தையை போற்றிய தமிழ் படங்கள் ஓர் பார்வை! - Kedi Billa Killadi Ranga

தந்தையர் தினம் (ஜூன் 18) இன்று கொண்டாடப்படுகிறது. அம்மாவை மட்டுமே அதிகமாக கொண்டாடிய தமிழ் சினிமா அப்பாவை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம். ஆனாலும் அவ்வப்போது அப்பாவின் வலியை, பெருமைகளை பேசிய படங்களும் வந்துள்ளன. அந்த படங்கள் என்ன என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

தந்தையை‌ப் போற்றிய படங்கள் ஒரு பார்வை
தந்தையை‌ப் போற்றிய படங்கள் ஒரு பார்வை

By

Published : Jun 18, 2023, 4:03 PM IST

  • அப்பா: சமுத்திரக்கனி இயக்கத்தில் 2016 ஆம்‌ஆண்டு வெளியான படம் அப்பா. சமுத்திரக்கனி என்றாலே கருத்துச் சொல்பவர் என்ற பிம்பம் உருவாகிய காலக்கட்டம் அது. இப்படத்தில் குழந்தைகளைப் பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசியது. தனது கனவுகளைக் குழந்தைகள்‌ மீது திணிக்கக்கூடாது. அவர்களை அவர்களாகவே வளர விட வேண்டும் என்றும் தனது பிள்ளைக்கு எது வரும் என்று அறிந்து அதன்படி வளர்க்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தியது. அதுமட்டுமின்றி இளம் வயது இனக் கவர்ச்சியையும் மிகவும் முதிர்ச்சியாகக் கையாண்டு இருந்தார் இயக்குநர் சமுத்திரக்கனி. நமக்கும் சமுத்திரக்கனி போல் ஒரு அப்பா இல்லையே என மாணவர்களை ஏங்க வைத்த படம்.
  • வாரணம் ஆயிரம்:கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா அப்பா, மகனாக இரட்டை வேடம் ஏந்திய படம். ராணுவத்தில் இருக்கும் மகனுக்குத் தந்தை இறந்த செய்தி கிடைக்கிறது. வரும் வழியில் மகனுக்குக் கிடைக்கும் அப்பாவின் நினைவலைகள் தான் படம். இப்படி ஒரு குரு நமக்கும் அப்பாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைத்தவர்கள் ஏராளம். சூர்யாவின் நடிப்பும் அருமையாக இருந்தது.
  • தவமாய் தவமிருந்து: 2005 ஆம் ஆண்டு சேரன் செதுக்கிய மகத்தான ஓ(கா)வியம் தவமாய் தவமிருந்து. ஒரு நடுத்தர குடும்பத் தலைவனின் வாழ்க்கையை அப்படியே எந்தவித சினிமா பூச்சுக்களும் இன்றி செல்லுலாய்டில் படம்பிடித்துக் காட்டியிருந்தார் சேரன். அப்பாவாக ராஜ்கிரண் அற்புதமான நடிப்பைக் கொடுத்திருந்தார். மகன்களுக்காக நிற்காமல் உழைத்து ஓடாய் போன அப்பாக்களின் வலியை நமக்குள் கடத்தினார் ராஜ்கிரண். ஒரு நடுத்தர குடும்பத்துத் தந்தையாக உறவுகளை மறந்து உழைத்து உழைத்துக் களைத்துப் போன உயிராக வாழ்ந்திருந்தார். “நான் படிக்க நினச்சதெல்லாம் நீ படிக்கோணும்” ஒவ்வொரு தந்தையின் வாழ்நாள் ஆசையே இது மட்டும்தானே. இதற்காக தானே இத்தனை ஓட்டமும் அப்பாக்களுக்கு. இனி இதுபோன்ற ஒரு படம் வரவே வராது.
  • தங்க மீன்கள்:“மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தைச் சேர்ந்தது இல்லை என்று” குழந்தைகள் கேட்பதை மறுக்காமல் செய்யும் தந்தையின் பாசத்தைச் சற்று மிகைத்தன்மையுடன் காட்டிய படம் தங்க மீன்கள். ஆனாலும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய படமாக அமைந்தது. 2013ல் வெளியான இப்படம் கல்விக் கட்டணம் குறித்துப் பேசியிருந்தாலும் அப்பா மகளுக்குமான உறவை அழகாகக் காட்டியது. மகளைத் தங்க மீனாக வளர்க்க ஆசைப்பட்ட ஒரு தந்தையின் கதை தான் இந்த தங்க மீன்கள்.
  • சந்தோஷ் சுப்பிரமணியம்:தெலுங்கு வெளியான ‘பொம்மரில்லு’ என்ற படத்தின் ரீமேக் தான் சந்தோஷ் சுப்பிரமணியம். ஆனாலும் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக மாற்றி இருந்தார் இயக்குநர் மோகன் ராஜா. தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் உறவை அழகாகக் காட்டிய படங்களில் இதுவும் ஒன்று. மகனுக்காகப் பார்த்து பார்த்து செய்யும் தந்தை. அந்த பார்த்து பார்த்து தான் மகனைப்‌ பாடாய் படுத்துகிறது. என்னதான் மகன்‌மீது அக்கறை இருந்தாலும் மகனது உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை அழகாக இப்படத்தில் சொல்லியிருந்தார் இயக்குநர்.
  • கிரீடம்: அஜித், ராஜ்கிரண், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் கிரீடம். இந்தப் படம் மலையாளப் படத்தில் ரீமேக். மகன் போலீசாக வேண்டும் என்ற ஆசைப்படும் தந்தை. சந்தர்ப்ப வசத்தால் ரவுடியாக மாறும் மகன். இப்படத்தில் இடம்பெற்ற கனவெல்லாம் பலிக்குதே பாடல் அப்பாவின் கனவுகளை அழகாக காட்டியிருந்தது. அப்பா, மகனை நண்பர்களாக காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்தப் படம்.
  • எம்டன் மகன்:சின்னத்திரையில் மெட்டி ஒலி நாடகம் மூலம் சிறந்த இயக்குநராக அறியப்பட்ட திருமுருகன், முதல் முதலில் இயக்கிய படம் எம்டன் மகன். இப்படத்தில் பரத், நாசர், வடிவேலு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கண்டிப்பு மிக்க தந்தையாக நாசர் நடித்திருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு அப்பா இருப்பார்‌. அதனை அழகாக காட்டியது இப்படம். ஆனாலும் அப்பாவின் கண்டிப்புக்குள் கரிசனம் இருக்கும் என்பதை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகக் கொடுத்திருந்தார். வடிவேலுவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும். எப்போதும் எரிந்து விழும் அப்பாவாக நாசர் அனுபவமான நடிப்பை கொடுத்திருப்பார்.
  • இந்தியன்: 1995 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து ஹிட்டடித்த படம் இந்தியன். தப்பு செய்தது மகனாக இருந்தாலும் அவரை தண்டிக்கும் படங்கள் நிறைய வந்திருந்தாலும் இது வித்தியாசமானது. சுதந்திரப் போராட்ட வீரரான தந்தை சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஊழலில் தனது மகனுக்கும் பங்கு இருப்பதை அறிந்து மகனைத் தண்டிக்க எடுக்கும் முடிவு தான் படம். இந்த வித்தியாசமான சிந்தனைக்காகப் படம்‌ மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அப்பா, மகனை போற்றி வந்து கொண்டு இருந்த படங்களின் மத்தியில் தப்பு செய்தது மகனாக இருந்தாலும் மன்னிப்பு கிடையாது என்பதை உரக்கப் பேசியது இந்தியன்.

இது தவிர இன்னும் நிறையப் படங்கள் அப்பாவின் பெருமை பேசியுள்ளன. குறிப்பாக டான், தெய்வத் திருமகள், அபியும் நானும், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட திரைப்படங்களையும் கூறலாம். மேலும் அப்பாக்களின் வலிகளையும், அப்பாவின் தியாகத்தை எடுத்துக் கூறும் வகையில் தமிழ் சினிமாவில் படங்கள் எடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தந்தையர் தின(Father's Day) நல்வாழ்த்துகள்.

இதையும் படிங்க: Adipurush: ஆதிபுருஷ் ராமாயணத்தை கேலி செய்யும் வகையில் உள்ளது; வழக்கு தொடுத்த இந்து சேனா!

ABOUT THE AUTHOR

...view details