சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிறந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இவரது முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் அதன் சுருக்கமே எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அழைக்கிறோம். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
சுவாமிநாதனின் தந்தை மருத்துவர் என்பதால் இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை, ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சம் சுவாமிநாதனை வெகுவாக பாதித்தது. அதனால் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தார்.
கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார். ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954-ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது. 1960-களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.
இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள் என்று பல நாடுகள் கூறின. இந்த விவகாரத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எம்.எஸ்.சுவாமிநாதன், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார்.