தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயராஜ், சாத்தான்குளம் பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். அவரது மகன் பென்னிக்ஸ் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 19 ஆம் தேதி இரவு ஜெயராஜின் மரக்கடைக்கு சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கடையை மூட வலியுறுத்தியுள்ளார். இதனால், உதவி ஆய்வாளருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையறிந்த பென்னிக்ஸ், தந்தையை விடுவிக்குமாறு காவலர்களிடம் கேட்டுள்ளார். விடுவிக்க மறுத்த காவலர்கள் தந்தை, மகன் இருவரையும் கடுமையாக தாக்கியதுடன், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளை சிறையிலடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்ஸ் நேற்றிரவும், ஜெயராஜ் இன்று காலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மேலும், இதுகுறித்து, வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உள்துறை செயலாளர், தமிழ்நாடு சிறைத்துறை கூடுதல் இயக்குநர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், மனித உரிமை ஆணைய காவல் துறை இயக்குநர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இன்னும் 8 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:படுகொலை செய்த காவல் துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்க - வைகோ