கரோனா ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானங்களைத் திறப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில், “தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) கட்டுப்பாட்டின்கீழ் விளையாட்டு மைதானங்களைத் திறப்பதற்கான வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்ட பின்னர் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு:
* விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலில் திரவ சோப்பு, சானிடைசர்கள் கை கழுவ வழங்கப்பட வேண்டும்.
* உடல் வெப்பநிலைக்கு வெப்பநிலைமானி கொண்டு பரிசோதித்தப் பிறகு மக்கள் விளையாட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
* முகக்கவசங்கள் அணிவது கட்டாயம். விளையாட்டு மைதானத்திற்குள் எல்லா நேரங்களிலும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
*விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
*சம்பந்தப்பட்ட விளையாட்டு அரங்க அலுவலர்களும் பயிற்சியாளர்களும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தின் திறனையும் மதிப்பிடுவார்கள், தகுந்த இடைவெளியைப் பாராமரிக்க ஆரம்பத்தில் 100 உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், மண்டலங்களிலிருந்து வருபவர்கள், விளையாட்டு மைதானத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.
*மக்கள் தங்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்குள் வீசாமல், அவர்களுடனேயே எடுத்துச் செல்ல வேண்டும்.