சென்னை:தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.27) பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மகளிர் உரிமைத் தொகையை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் எனவும், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், தொழில்துறையில் இரண்டு, மூன்று ஆண்டுகளில் கடும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பலாஜி, "அதிமுக ஆட்சியின்போது 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனில் விட்டுச் சென்றீர்கள். 2 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தவில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மத்திய அரசும் கட்டாயப்படுத்தியதால் உயர்த்தப்பட்டது. மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு எச்சரித்ததால் மின் கட்டணத்தை உயர்த்தினோம். தற்போது 2 கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளில் 1 கோடி பேருக்கு எந்தவித மின்கட்டணமும் விதிக்கப்படவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய தங்கமணி, "எங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியது, ஆனால், எங்களது முதலமைச்சர் மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தார்" எனத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தற்போது 18,053 மெகாவாட் அளவுக்கு மின் தேவை உயர்ந்திருக்கிறது. தொழிற்சாலைகளுக்கான தேவை 35 ஆயிரத்து 615 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. 18 மணி நேரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.