புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்திவருகின்றன.
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் தங்களது கைகளை சங்கிலியால் கட்டிக்கொண்டும் கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டும் அரை நிர்வாணப்போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அடிமையாகளாக மாறுவதை தடுக்க புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்:தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு விவசாயிகளின் வயிற்றில் நடிப்பதை கண்டித்து விவசாயிகள் தங்கள் வயிற்றை கட்டி கொண்டு முழக்கமிட்டனர். மேலும், எம்எஸ் சாமிநாதன் அறிக்கையினை அமல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முன்வர வேண்டுமெனவும் முழக்கமிட்டனர்.
விழுப்புரம்:புதிய வேளான் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இன்று அனைத்து விவசாயிகள் சங்க சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி. சரவணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பல்வேறு இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர்:அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பெரம்பலூரில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் உருவபொம்மையை விவசாயிகள் செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இம்மறியலில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்: சேலம் கோவை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இதனால், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் , பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட 7 இடங்களில் வேளாண் மசோதாவை எதிர்த்துப்போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை:தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்துப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, சிலர் சாலையில் அமர்ந்துப் போராடத்தொடங்கினர். இதனால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர்: புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்: கோவை சாலையில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்மறியல் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி:தென்காசி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாய குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு வேளாண் மசோதா நகலை எரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் தஞ்சாவூர் -நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அரை மணி நேரத்திற்க்கும் மேலாக பாதிக்கப்பட்டது.