சென்னை: புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ்.முத்து நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் திருப்பதியில் எல்எல்பி 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று (ஜன.6) தனது பைக்கில் தாஸ் நகர் வழியாக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அஜித் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் பைக்கை வழிமறித்துள்ளனர். பின்னர் பைக்கில் மது பாட்டில் உள்ளதா எனவும் சோதனை செய்துள்ளனர்.
இந்த பக்கம் வரக்கூடாது என்று ஆகாஷை மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற ஆகாஷ், நடந்தவற்றை சகோதரர் அஜித்திடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஆகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரும், தாஸ் நகருக்குச் சென்று, மிரட்டிய நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அஜித்தை அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த அஜித்தை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் மனோ பார்த்துள்ளார். எனவே மனோ, தனது மனைவி சுப்புலட்சுமி மற்றும் சிலருடன் சேர்ந்து மிரட்டல் விடுத்த கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் திடீரென அஜித், தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மனோவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, அஜித்தின் காலில் விழுந்து, வெட்ட வேண்டாம் என கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளார். ஆனால் சுப்புலட்சுமியின் தலையிலும் வெட்டிய கும்பல், மனோவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அருகிலிருந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.