சென்னை:விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி (25). இவர், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். சுகந்தி, கடந்த 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில், திருப்பூரில் சுகந்தி பணியாற்றியபோது ஏற்கனவே திருமணமான விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
விஷ்ணு தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டு சுகந்தியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பல மாதங்களாகத் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் சுகந்தி மற்றும் விஷ்ணுவிற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், வீடியோ காலில் சுகந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விஷ்ணுவிடம் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் காவலர் விஷ்ணு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகிறார். இந்த நிலையில் தனது சகோதரியின் தற்கொலைக்குக் காரணமான காவலர் விஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகந்தியின் சகோதரர் சுப்பராமன் தனது குடும்பத்துடன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.