சென்னை:வளசரவாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் (35), அதிமுக மாணவர் அணி மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி தனது நண்பர்களான அபிஷேக் ஜேக்கப், யாசின் ராஜா ஆகியோருடன் சேர்ந்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நண்பரின் குழந்தையை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது காரை பார்கிங்கில் நிறுத்திவிட்டு சென்றார். அப்போது காரில் 13 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துவிட்டு சென்றார். இதையடுத்து திரும்பி வந்த போது, காரினுள் இருந்த 13 லட்சம் ரூபாய் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, காக்கி பேண்ட் அணிந்து, கையில் வாக்கி டாக்கியுடனும் வந்த ஒருவர், காரை திறந்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜமாலுதீன்(41) கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.