சென்னை: கடந்த 2010 பிப்ரவரி மாதம், மதுரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அப்போதைய உதவி ஆணையர் வெள்ளைதுரை, எஸ்ஐ, மற்றும் ஏட்டை தாக்கி, பைக்கில் தப்ப முயன்ற பல வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல்கள் கவியரசு, முருகன் என்ற கல்லு மண்டையன் ஆகியோரை வெள்ளைதுரை போலி என்கவுண்டர் நடத்தியுள்ளார் எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் எ.குருவம்மாள் மற்றும் எம். சீதாலட்சுமி ஆகியோர் இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் ஆணையம் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வெள்ளைதுரை, கவியரசு மற்றும் முருகனை போலி என்கவுண்டர் சுட்டுக்கொன்றதாக கூறி அவருக்கு ரூ.3 லட்சமும், மற்ற காவல்துறையினர் தலா ரூ.1.5 லட்சமும் சுட்டுக்கொல்லப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த தொகையினை நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. இதில் வெள்ளைத்துரை அளிக்கும் ரூ.3 லட்சம் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு குடும்பத்திற்கும், மீதமுள்ள ரூ.3 லட்சம் மற்றொரு குடும்பதிற்கும் கொடுக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.