சென்னை: தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் சேர, ஜூன் 25ஆம் தேதிமுதல் https://tngptc.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துவருகின்றனர்.
ஏற்கனவே ஜூலை 19ஆம் தேதிவரை மாணவரகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்த நிலையில் முதலாமாண்டு, பகுதிநேர டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு மேலும் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை, https://tngptc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
கால அவகாசம் நீட்டித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு முதலாமாண்டு, பகுதி நேரம் பட்டயப்படிப்பு விண்ணப்பங்களில், 2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மட்டும், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். பிற மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.
நிரப்பப்படவுள்ள 18,120 இடங்கள்
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில், 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், மூன்று இணைப்புக் கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுவரையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்பில் இணைய விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு ஆல்பாஸ் - அமைச்சர் அன்பில் மகேஷ்