தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்விக் கட்டணம் தொடர்பாக தனியார் கல்லூரிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.ஆர்க். உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு கல்விக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தனியார் கல்லூரிகள் விண்ணப்பிக்க ஜூன் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழில் கல்வி
தொழில் கல்வி

By

Published : Jun 3, 2020, 3:52 PM IST

தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய குழு, தொழிற்கல்விக்கான கல்விக் கட்டணத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்து அறிவிக்கும். 2017-18ஆம் கல்வியாண்டில் சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கட்டணத்தை, அப்போதைய கட்டண நிர்ணய குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் அறிவித்தார். தற்போது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், மூன்றாண்டுகள் முடிவடைந்து உள்ளதால் 2020 -21ஆம் கல்வியாண்டில் புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய, நிர்ணயக் குழு அறிவிப்பு வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், ”தனியார் தொழிற்கல்வி நிறுவனங்களில் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய கல்வியாண்டுகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பி.இ., பி.டெக். , பி.ஆர்க். உள்ளிட்ட இளநிலை படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். மற்றும் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புகள் ஆகியவற்றுக்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு மே 30ஆம் தேதிக்குள் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிமுறைகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, கல்லூரிகளுக்கு ஜூன் மாதம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகள் விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதற்கான மனுவை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் கட்டண உயர்விற்கு அளிக்க வேண்டிய படிவங்களைச் சமர்ப்பிக்க, மேலும் கால அவகாசம் வேண்டும் என தனியார் கல்லூரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கட்டண நிர்ணய குழு, தனியார் கல்லூரிகள் ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details