திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள விரகலூர் பகுதியில் பிறந்து வளர்ந்த சமூகப் போராளியான ஸ்தனிஸ்லால் லூர்துசாமி என்ற ஸ்டான் சுவாமி, ’இயேசு சபை’ என்னும் சர்வதேச அமைப்பின் மூலம் மக்களின் மறுக்கப்பட்ட நீதிக்காக தனது குரலை தொடர்ந்து எழுப்பி வந்தார்.
ஜார்கண்ட் பழங்குடியின மக்களுக்காக போராடியவர்
காவிரி டெல்டாவில் பிறந்த ஸ்டேன் சுவாமியின் வாழ்வு ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி, சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கல்வியறிவற்ற பழங்குடியினர் மத்தியில் பாசாங்கு காட்டாத புத்திஜீவியாகவே விளங்கினார்.
மலைப்பகுதியில் உள்ள கனிம வளங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் எடுக்க மாநில அரசு முயற்சி செய்தபோது, அதற்கு தடையாகவும் பெறும் சவாலாகவும் ஸ்டேன் சுவாமி திகழ்ந்தார்.
அரசின் அடுத்தடுத்த கனிமவள கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகவும் அவர் செயல்பட்ட நிலையில், சமூக செயற்பாட்டாளர் என்ற போர்வையில் மக்களை தூண்டிவிடுவதாக ஸ்டேன் மீது மாநில அரசு குற்றஞ்சாட்டியது.
பீமா கோரேகான் வழக்கில் கைது
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், பீமா கோரேகான் எனும் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களை கௌரவிக்க, நடைபெற்ற நினைவுக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தின் பின்புலத்தில் நக்சல் அமைப்பு இருப்பதாகவும், தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறி அக்கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டேன் சுவாமியை 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசியப் புலனாய்வு முகமை கைது செய்தது.
மறுக்கப்பட்ட பிணை
முதுமை மற்றும் பார்கின்சன் (கைநடுக்கம்) நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டேன் சுவாமியை கடந்த ஒன்பது மாதங்களாக நக்சல் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி தேசியப் புலனாய்வு முகமை சிறையில் அடைத்தது. மருத்துவக் காரணங்களுக்காக பிணை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தும், அவருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றங்கள், சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அவருக்கு அனுமதி வழங்கியது.
ஸ்டேன் சுவாமி மரணம்
ஆனால், தனக்கு பிணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் ஸ்டேன் சுவாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்ற ஜூலை 5ஆம் தேதி மருத்துவமனையில் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார்.
இவருடைய மரணம் நாடு தழுவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
”மக்களுக்காக போராடியவருக்கு சாகும் நிலையிலும் ஏன் பிணை வழங்கப்படவில்லை? மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இங்கே ஒடுக்கப்படுகிறார்களா?” என்று சமூக ஆர்வலர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் அரசிடம் தங்கள் கேள்விக்கணைகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஸ்டேன் சுவாமி மரணம்: வருத்தம் தெரிவித்த ஐநா மனித உரிமை ஆணையம்
சட்ட வல்லுநர்கள் கருத்து
இதற்கு தீர்வுதான் என்ன, சட்டம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமனிடம் கேட்டபோது, ”’உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டால் பிணை கிடையாது. ஏனெனில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க நீதிமன்றம் அனுமதிப்பது இல்லை. இந்தியாவில் இதுவரை விசாரிக்கப்பட்ட ’உபா’ வழக்குகளில் 2 விழுக்காடு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 98 விழுக்காடு வழக்குகளில் இன்னும் தண்டனை விதிக்கப்படவில்லை. இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர் தீர்ப்புக்காக பல ஆண்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டவராகவே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சட்ட வல்லுநர்களின் கருத்து இந்தச் சட்டத்தில், ஆங்கிலேயர் காலம் முதல் தற்போதுவரை அரசுக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பவர்கள் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டவருக்கு விசாரணை முடியும்வரை பிணை வழங்க வேண்டும். அரசுக்கு எதிரான கருத்து சொல்பவர்களின் குரல்களை நசுக்கவே ’உபா’ சட்டத்தை ஒன்றிய அரசு கையாண்டு வருகிறது. அதைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் ’பிணை மறுப்பு’ என்பது அவரை கொலை செய்ததற்கு சமமாகவே கருதப்பட வேண்டும்.
ஸ்டேன் சுவாமி மக்கள் போராளியாக நல்லெண்ண அடிப்படையில் நக்சல் அமைப்புடன் பேசினால், அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என முத்திரை குத்தப்படுவதை ஏற்கமுடியாது” என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சந்தேகத்தை வைத்து ஜாமீன் மறுக்கப்படக்கூடாது
மேலும் இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் கே. வெங்கடரமணன் ”குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றம் உண்மையாக இருந்தால் பிணை மறுக்கப்படலாம். மாறாக சந்தேகத்தை முன்வைத்து பிணை மறுக்கப்படக் கூடாது. ஸ்டேன் சுவாமி, மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு தடையாகவும், மக்களுக்கு ஆதரவாகவும் இருந்ததால், அவரை நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புபடுத்தி, அவரை தண்டிக்கும் நோக்கத்திலேயே பிணை வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் கே. வெங்கடரமணன் "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்", "ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதிகூட சட்டத்தில் தண்டிக்கப்பட கூடாது" என்ற சட்ட வாத பிரதிவாதங்கள் அனைத்தும் மக்கள், போராளிகள் என வரும்போது மௌனமாவது நீதிமன்றங்கள் மீதான கடைசி நம்பிக்கையையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலேயே அமைகிறது.
இதையும் படிங்க:காவிரி டெல்டா முதல் ஜார்க்கண்ட் காடுகள் வரை: ஸ்டேன் சுவாமியின் செயல்பாடு