சென்னை: அண்மைக் காலமாகவே வன விலங்குகள் வனப்பகுதிகள், காப்புக்காடுகளை விட்டு வெளியே வந்து சாலை, குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் மனித - வன விலங்குகள் இடையேயான மோதலும் அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, தேசிய புலிகள் காப்பகத்தின் கீழ் இயங்கும் வனப்பகுதிகளில் புலிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன. இதை குறிப்பிட்ட வனஅலுவலர்கள் கண்டுகொள்வதில்லை என வன விலங்கு ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மனித - விலங்கு மோதல் - பிரத்யேக பேட்டியுடன் சிறப்பு தொகுப்பு மனிதர்களின் செயல்களால் அழியும் விலங்குகள்
வன விலங்கு ஆர்வலர்களின் கூற்றுப்படி, "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பக பகுதியில், கழுதைப்புலி ஒன்று அதிவேகமாக சென்ற வாகனத்தின் மீது மோதியதில் உயிரிழந்தது.
வனங்களை அழித்தல், வனவிலங்குகள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்ற மனிதர்களின் செயல்களால்தான் விலங்குகள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறுகிறது" என்று வருத்தம் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த கானுயிர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜோசப் ஹூவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "காப்புக்காடுகளில் விலங்குகள் அதிகளவில் தாக்கப்படுவது கவலையளிக்கிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடர்ச்சியாக இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
மனித-விலங்குகள் மோதலை தடுக்க கோரிக்கை:
எனவே, இந்த வன விலங்கு தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முதுமலையில் வன உயிரினங்களின் தாக்குதல் சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
வனத்துறை அலுவலர்களும் இதனை தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். காப்புக்காடுகளின் அருகே வாழும் உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மனித-விலங்குகள் மோதலை தடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
சமீபத்தில் கூடலூர் வனக்கோட்டத்தில் உள்ள பட்டா நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டியதால் நான்கு வன ஊழியர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயத்தில் புலி உள்ளிட்ட விலங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.
கண்டுகொள்ளாத வன அலுவலர்கள்:
இந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் அங்கே பணிபுரியும் அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஐந்து செந்நாய்கள், இரண்டு புலிகள், இரண்டு யானைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளன.
இன்றைய நிலவரப்படி காடுகள், மலையடிவாரங்களில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்படுவதால் யானை, மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அவை விவசாய நிலங்களில் புகுகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிர்சேதங்கள் ஏற்படுகின்றன.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு:
இது குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஈ டிவி பாரத்திடம் கூறுகையில், "வன விலங்கு தாக்குதல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே இரண்டு வன ஊழியர்களை விதிகளை மீறியதற்காக தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளேன். மேலும், முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் வன விலங்குகள் இறந்ததற்கு குறிப்பிட்ட வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
வன அலுவலர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றாமல், மூன்று ஆண்டிற்கு ஒருமுறை பணி மாற்றம் செய்யப்படுவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனித - விலங்கு மோதலை தடுக்க தனிப்பிரிவு: வனத்துறை அமைச்சர்