சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் செய்து வரும் பணிகள் மற்றும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் மெளரியா ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி - 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் எவ்வாறு தயாராகி வருகிறது?
பதில் - மூன்று தேர்தல்களில் தோல்வியை சந்தித்ததால் தொண்டர்கள் சோர்விழந்துள்ளனர். அவர்களை உத்வேகப்படுத்துவதற்குதான் இது போன்று மாவட்டமாக சென்று நாடாளுமன்ற தேர்தலுக்காக ஓராண்டு முன்பாகவே கூட்டங்கள் நடத்தி வருகிறோம். பல கட்சிகள் பல்வேறு தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இருப்பினும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் பெரிய அளவில் சோர்வடையவில்லை.
அதற்கு முக்கிய காரணம், கமல்ஹாசன் தொடர்ந்து மக்கள் மத்தியில் இருப்பதுதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது வெளிவந்த விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனவே அவர் தொடர்ந்து மக்கள் மத்தியில் தனது இருப்பை காட்டி வருகிறார்.
கேள்வி - இதுவரை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எது குறித்து ஆலோசிக்கப்பட்டது மற்றும் தொண்டர்களிடம் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?
பதில் - மாவட்டம் மாவட்டமாக சென்று மாவட்டச் செயலாளர் தலைமையில், அங்கு இருக்கும் அணிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறோம். இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது, அங்கு எத்தனை முகவர்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் கருத்து இன்னும் மக்களிடையே சென்று சேரவில்லையோ என்ற ஐயம், இந்த கூட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே வீடு வீடாக சென்று எங்களது கருத்துகளை தெரிவிப்பதை இலக்காக தற்போது வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தொகுதியும் எங்களுடைய கொள்கைகளை பிரசுரம் மூலம் வீடு வீடாக கொடுக்க இருக்கிறோம். குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு மக்களை சந்தித்துள்ளார்கள் என்பது குறித்து, அந்த மாவட்டச் செயலாளர் தலைமைக்கு அறிக்கை கொடுப்பார்கள்.
கேள்வி - மக்களை சென்றடைவதற்காக கால அளவு ஏதாவது இருக்கிறதா?