சென்னை:சென்னை ஐஐடியின் வேலைவாய்ப்புத் துறை ஆலோசகரும், பேராசிரியருமான சங்கர் ராம் நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார். அதில், "நடப்புக் கல்வியாண்டில் டிசம்பர் 1ஆம் தேதிமுதல் 10ஆம் தேதிவரை நடைபெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கு ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் முதற்கட்டமாக ஆயிரத்து 85 மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைக்கான உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த மாணவர்களின் 73 விழுக்காட்டினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 60 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை கிடைத்தது.
இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மீதமுள்ள மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பிற்கான தேர்வுகளை நடத்துவதால் அவர்களுக்குப் பணியாளர்கள் தேவைப்படும்போது தேர்வு நடத்துகின்றனர்.
கரோனா தொற்று காலத்திலும் அதிக வேலைவாய்ப்பு
சென்னை ஐஐடியில் உள்ள நான்கு முக்கியப் பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சற்று ஏறக்குறைய அதே அளவில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.