சென்னை: கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வீடுகள், சாலைகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, பொதுப்பணித்துறையின் முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளரும், பாசன வல்லுநருமான அ. வீரப்பன் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், " சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. இதற்கு பல காரணங்களை முன் வைக்கலாம்.
சென்னையில் 85% கட்டடம்; 15% காலி இடம்
சென்னையில் உள்ள மழை நீர் வடிகால்கள் முறையாக கட்டப்படவில்லை. இந்த வடிகால்கள் அருகில் இருக்கும் ஆறுகள் மற்றும் கால்வாய்களுடன் இணைக்கப்படவில்லை. தனியார் தொண்டு நிறுவனம் எடுத்த ஆய்வு படி, சென்னையில் 1980ஆம் ஆண்டு 80 விழுக்காடு காலி இடமும், 20 விழுக்காடு கட்டடங்களும் இருந்துள்ளது. ஆனால், 2015-16 காலகட்டத்தில் 85 விழுக்காடு கட்டடங்களும், 15 விழுக்காடு காலி இடமும் இருக்கிறது.
ஏரிகள் ஆக்கிரமிப்பு ஒரு பெரும் சவாலாக உள்ளது. பெரும்பாலான ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாக மாற்றப்பட்டுள்ளன. கோயம்பேடு பெரிய பேருந்து நிலையம் கூட ஒரு காலத்தில் ஏரியாக இருந்ததுதான். இவைகள் அனைத்தும் சென்னை வெள்ளத்திற்கு முக்கிய காரணங்கள்.