சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் செய்வதற்கான திருத்தப்பட்ட அரசாணையை உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
அந்த அரசாணையில் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்து தேர்வு மற்றும் பணி அனுபவத்திற்கும், மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
எழுத்துத்தேர்வில் 200 மதிப்பெண்களும் பணி அனுபவத்திற்கு 30 மதிப்பெண்களும் என 230 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 7,918 உதவி விரிவுரையாளர் பணியிடங்களில் 4,000 பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்பட உள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் அனுபவம் மதிப்பெண்கள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப ஓராண்டிற்கு இரண்டு மதிப்பெண்கள் விதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
உதவி விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். தாள் ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கும்; தமிழ் மொழி பாடத் திறனுக்கான கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். அதனைத்தொடர்ந்து தாள் இரண்டில் தொடர்புடைய பாடங்களுக்கான 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரத்திற்கு தேர்வு நடைபெறும். அதன் பின்னர் 30 மதிப்பெண்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு எனும் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது'