சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மாலை 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அதைத் தொடர்ந்து சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் பின்பு பிரதமர் சென்னை புதிய விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடக்கும் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் இன்று இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்று, இரவு தங்குகிறார். மறுநாள் காலை மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அதன் பின்பு மீண்டும் ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.
இதைப்போல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் தமிழ்நாடு வருவதையொட்டி, டெல்லியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட எஸ்பிஜி வீரர்கள் சென்னை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் சென்னை மற்றும் புறநகரில் 5 மணி நேரம் காரில், ஹெலிகாப்டரில் பறந்தபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில், கர்நாடக மாநிலம் மைசூர் சென்று விடுகிறார்.