1. நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர் பழனியின் உடல் நல்லடக்கம்!
இந்திய-சீன எல்லை மோதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் சிறப்பு விமான மூலம் நேற்று இரவு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு அவரது உடலக்கு மதுரை ஆட்சியர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கடுக்கலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
2. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு வெற்றி!
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியா போட்டியிட்டது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே இந்தியாவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது. தேர்தலிலும் அது பிரதிபலித்தது. 184 ஓட்டுகளைப் பெற்று போட்டியின்றி இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டது.
3. நாளை நள்ளிரவு முதல் அமலாகும் முழு ஊரடங்கு!
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை நள்ளிரவு முதல் சென்னை பெருமாநகராட்சிப் பகுதிகள் முழுவதிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை பெருமாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.