சென்னை:கோயம்பேடு-னா பஸ், தி.நகர்-னா டிரஸ், சேப்பாக்கம்-னா-ஸ்டேடியம், மயிலாப்பூர் சங்கீதம், பிராட்வே-கட்டடங்கள், மெரினா பீச், கிண்டி பூங்கா, அண்ணா நூலகம் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு இடங்கள் சிறப்பை கொண்டு ஒற்றை நகரமாக 300 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகிறது, நமது 'சென்னை' சிட்டி.
சென்னைக்கு இன்று வயது 384. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ‘சென்னை தினம்’ (Madras Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் தமிழகத்தின் பிற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் சென்னைக்கு என்று எப்போதும் ஒரு தனித்துவமான நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்று முதலாம் உலகப் போர் முதல் உலகப் விளையாட்டு போட்டிகள் வரை என்று தான் சொல்ல முடியும். சோழர், பல்லவர் காலத்தில் இருந்து தொடங்கி, விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களை அடுத்து வந்த பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை நகரம் எப்போதும் ஒரு ஆட்சி அதிகாரத்தின் மையமாக இருந்தது. இது மட்டுமின்றி ஒரு வியாபர தளமாகவும், பிறரின் வாழ்வியல் தளமாகவும் இருந்து வருகின்றது.
சென்னையின் வரலாற்றில் வடசென்னை: சென்னையின் வரலாறு என்று அனைவரும் பார்ப்பது, சென்னையின் வழிப்பாட்டு தளங்களும், சென்னையின் பாரம்பரிய கட்டடங்களும், சிலைகளும், பாலங்களும், வானுயர்ந்த கட்டடங்களும், அதில் பறவைகளாய் இருக்கும் சென்னை வாசிகளும் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால், சென்னையின் வரலாறு எங்கு இருப்பது கேட்டால் மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, புனித ஜார்ஜ்கோட்டை பகுதிக்கு தெற்கே இருக்கும் தென்சென்னை பகுதியைப் பற்றித்தான் பெரும்பாலனோர் பேசுவர். ஆனால், சென்னையின் பூர்வகுடிகளும், சென்னையின் உழைக்கும் மக்கள் இருக்கும் இடமான வட சென்னை, எப்போதும், தனி சென்னையாக தான் பார்க்கப்படுகிறது.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என்று மூன்று விதமாக சென்னையைப் பிரிக்கலாம். ஆனால், சென்னையின் தனித்துவமான வட்டார மொழி, பிறப்பெடுத்த இடம், மக்களின் சில கலாசாரம், மக்களின் வாழ்வியல் நெறி என்று பலவகைப்படுத்தப்படுவதாக வட சென்னை பார்க்கபடுகிறது. தென் சென்னை, மத்திய சென்னை எப்போதும், இடம் பெயர்ந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும், இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை உள்ளடக்கியது என்றும் கூட கூறலாம். தனக்கென்று தனித்துவமாக இருக்கும் சென்னையின் சிறப்பம்சங்கள் இவைபோல பலவகையில் உள்ளது.
மெட்ராஸ் டூ சென்னை:1746 ஆம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749ஆம் ஆண்டு இப்பகுதிகள் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதன்பின், சென்னை நகரம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டதோடு, இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் ரயில் மார்க்கமாக சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின் சென்னை, அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம், 'தமிழ்நாடு' எனப் பெயர் மாறுதலுக்கு உள்ளானது.
சென்னை என்று பெயர் மாறுதலுக்கு உள்ளாவதற்கு முன்பு சென்னைக்கு அன்று தனிப்பெயர் இருந்துவந்தது. சென்னப்பட்டினம், பட்டினம், மதராஸப்பட்டினம் என்று பல்வேறு மக்களால் கூறப்பட்டது. மேலும், சென்னையின் அல்லது மெட்ராஸ் பெயர் காரணம் ஆயிரம் ஆயிரம் கதைகள் வந்துக் கொண்டிருந்தாலும், சரியான வரலாறு என்பது இதுவரை தெளிவாக இல்லை. ஆனால், 'பட்டினம்' என்ற சொல் இருக்கலாம் என்று பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், கடலை ஒற்றிய பகுதிகளுக்கு 'பட்டனம்' என்றும் 'பாக்கம்' என்றும் சொற்கள் இருந்து வருகிறன.